பிஜி

பிஜித் தீவில் கரும்பு சாகுபடி செய்வதற்காகப் பீகார், வங்காளம், பஞ்சாப் மற்றும் சென்னை மாகாணங்களிலிருந்து 1879ஆம் ஆண்டு விவசாயத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். பிஜித் தீவு பற்றியோ தாங்கள் எதற்காக அழைத்துச் செல்லப்படுகிறோம் என்பதைப் பற்றியோ எதையும் அறியாதவர்களாக இவர்கள் அங்கே போனார்கள். 1984ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்குப்படி பிஜி தீவில் 50,000 தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 5,000 பேர்களுக்கு மட்டுமே ஓரளவு தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியும். மற்றவர்களுக்குத் தமிழ் பேசக் கூடத் தெரியாது. பிஜித் தீவில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் தெரியாது. 50 சதவீதத்திற்கு மேற்பட்ட தமிழர் வீடுகளில் தமிழ் பேசப்படவில்லை. தமிழைப் பேசுவதும் தாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தை வெளிப்படுத்துவதும் அவமானத்திற்கு உரிய ஒன்றாக தமிழர்கள் கருதினார்கள். தமிழர்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை காரணமாக தமிழ் கற்பதில் ஆர்வம் காட்டவில்லை. அதே வேளையில் இந்தி மொழி பேசுபவர்கள் இந்தியைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டார்கள். பிஜித் தீவில் தமிழ் மாநாடு ஒன்று நடத்தப்படுவதை இந்திக்காரர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இந்தியாவிலிருந்து சென்றவர்கள் அனைவரும் இந்தி படிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தப் பட்டார்கள். பிஜித் தீவில் குடியேறிய இந்தியர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஆங்கிலத்தையும் கால்வாசிப் பேர் இந்தியையும் 14 சதவீதம பேர் தமிழையும் ஆதரித்தார்கள். பிஜி மக்களிடையே இந்தியைப் பரப்புவதில் இந்திய அரசு ஏராளமான பணத்தைச் செலவழித்தது. ஆனால் தமிழக அரசு தமிழ்ப் படிப்புக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ் தட்டச்சு இயந்திரம் மற்றும் தமிழ் கற்பதற்கான உதவிகளை செய்யும்படி தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை அரசு ஏற்கவில்லை. பிஜித் தீவில் வாழ்ந்த இந்திய மக்களிடையே கலப்புத் திருமணங்கள் தாராளமாக நடந்தன. இதன் விளைவாகவும் இந்தி பொது மொழியானது. தமிழ் பண்பாடு மேலும் தகர்ந்தது. பிஜித் தமிழர்களிடையே தாய் மொழி உணர்வு என்பது முழுமையாக அற்றுப் போய்விட்டது. தமிழுக்குப் பதில் இந்தி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. தமிழர்களின் தாழ்வு மனப்பான்மை, தமிழக அரசிடமிருந்து எவ்வித ஆதரவும் கிடைக்காமை, பிஜி அரசின் கொள்கை, கலப்புத் திருமணங்கள், இந்தி பேசுபவர்களின் ஆதிக்க மனோபாவம் இவற்றின் காரணமாக தமிழ் தன் இடத்தை இழந்தது. இந்தியைத் தமது தாய்மொழியாகத் தமிழர்கள் ஏற்க வேண்டி நேரிட்டது. பிஜித் தமிழர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் தாய்மொழியைத் தியாகம் செய்தார்கள்.

No comments:

Post a Comment